ஞானஸ்நானம் என்றால் என்ன?

ஞானஸ்நானம் என்றால் என்ன?

கிறிஸ்தவ உலகில் ஞானஸ்நானம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 'நான் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறேன். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்களா?" என்று பல விசுவாசிகள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கலாம். ஞானஸ்நானம் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்பது ஒரு அடையாளச் செய்கையாகும். ஓர் உள்ளான பொருளை அல்லது கருத்தை வெளிப்படையாகத் தெரியப்படுத்தும் செயல் அடையாளச் செய்கை ஆகும்.

2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் என்பவர் மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இவர் ஞானஸ்நானம் கொடுத்ததினால் யோவான் ஸ்நானகன் என்று அழைக்கப்பட்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 30 வயதான போது யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகன் என்பவரிடம் ஞானஸ்நானம் பெற்றார். மத்தேயு 3, லூக்கா 3ம் அதிகாரங்களை வாசித்துப்பாருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் பரத்திற்கு ஏறிச்செல்லும் முன்னர் கொடுத்த கடைசிக் கட்டளையில் ஞானஸ்நானம் என்பது அடங்கியுள்ளது (மத்தேயு 28:19).

கிறிஸ்தவத் திருச்சபை தோன்றிய காலத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பின்பற்றினவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவ்வாறு மக்கள் ஞானஸ்நானம் பெறும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரர், இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்ட விசுவாசிகளை தண்ணீரில் முழுக்கி, 'ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடைசிக் கட்டளைப்படி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் இவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" என்று பகிரங்கமாய் அறிவிக்கிறார். இந்த அடையாளச் செயல் தான் ஞானஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒருவர் ஆண்டவராகிய இயேசுவின் போதனைகளைக் கற்றுக் கொண்டு, அவரைப் பின்பற்றுவதில் ஞானஸ்நானம் பெறுவது ஒரு முக்கியமான படியாகும்.

ஞானஸ்நானம் என்பது எதைக் காட்டுகிறது?

ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்ற வார்த்தையின் பொருள் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் எழுதப்பட்ட கிரேக்க மொழியில் ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு 'பேப்டைஸோ" 'பேப்டிஸ்மோ" (Baptizo) என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பதம் புதிய ஏற்பாட்டில் சுமார் 78 இடங்களிலும் 'மூழ்குதல்", 'ஆழ்த்துதல்" என்ற பொருள்களிலேயே விளங்கப்படுகின்றது. சாயம் ஏற்றுவதற்காக துணிகளைச் சாயத்தண்ணீரில் மூழ்க வைத்து எடுப்பதையும் இச்சொல்லினால் தான் குறிப்பிட்டார்கள்.

இந்த அடிப்படையில் கவனிக்கும் போது தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதே சரியான முறை என்பது தெளிவாகும். தலையில் தண்ணீரைத் தெளித்தும், தண்ணீரை ஊற்றியும் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். ஞானஸ்நானத்தின் ஆவிக்குரிய கருத்து இந்த வகையில் கொடுத்தால் சரியாக, முழுமையாக வெளிப்படாது. தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதே வேதம்காட்டும் சரியான முறையாகும். ஞானஸ்நானம் என்பதற்கு இன்னொரு பதம் திருமுழுக்கு என்பதாகும். எனவேதான் நீங்கள் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுதல் வேண்டும்.

ஞானஸ்நானம் பெறுகிறவர் தண்ணீரில் மூழ்கும்போது கிறிஸ்துவுடன் அடக்கம்பண்ணப்பட்டதாகவும், தண்ணீரை விட்டு எழும்போது கிறிஸ்துவுடன் எழுந்திருப்பவராகவும் விசுவாச அறிக்கை செய்கிறார் (ரோமர் 6:1-4). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகப் பெற்ற தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடனாய் நான் என்றென்றும் வாழ்வேன் என்ற அர்ப்பணிப்பையும் ஞானஸ்நானம் என்ற அடையாளச் செயல் மூலம் அவர் எடுத்துக்காட்டுகிறார். உள்ளான ஆவிக்குரிய அனுபவத்தின் உண்மையை தெரியப்படுத்தும் வெளிப்படையான செயல்தான் ஞானஸ்நானம் ஆகும்.

ஞானஸ்நானம் வெளிப்படுத்தும் கருத்து என்ன?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் பாடுபட்டு, இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாம் நாள் உயிருடன் எழும்பினார். இதை நாம் விசுவாசிக்கிறோம். கிறிஸ்துவோடு கூட மரித்தோம் என்ற உண்மையும் வேதம் போதிக்கிறது. இதைத்தான் 'கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன், ஆயினும் பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். புதிய ஏற்பாட்டில் கலாத்தியர் 2:20 வாசித்துப் பாருங்கள்.

நாம் நம்முடைய பாவங்களுக்கா மரிக்க முடியாது. கிறிஸ்துதான் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். ஆகவே, நாம் நம்முடைய பாவங்களுக்கு மரிக்க வேண்டும். பாவத்தை விட்டு, பாவத்தினால் பாதிக்கப்படாதபடி பிரிந்திருக்கவேண்டும். கிறிஸ்துவோடு கூட நான் மரித்தேன் என்று ஆவிக்குரிய உண்மையை விசுவாசிக்கும் போது பாவத்திற்கு மரிக்கும் அனுபவத்தை நாம் பெற முடிகின்றது. இது ஏதோ ஓர் நாளில் கிடைத்து, அதோடு முடிந்து விடும் அனுபவம் அல்ல, ஒவ்வொரு முறையும் நாம் பாவச்செய்யத்தூண்டப்படும் போது கிறிஸ்துவோடுகூட மரித்தேன் என்ற உண்மையை பற்றிக் கொள்ளும்போது, பரிசுத்த வாழ்க்கைக்கான பெலனும், பாவத்தின் மீது வெற்றியும் நமக்குக் கிடைக்கிறது.

கிறிஸ்துவோடுகூட மரித்தேன், கிறிஸ்துவோடுகூட அடக்கம் பண்ணப்பட்டேன், கிறிஸ்துவோடுகூட உயிரோடு எழும்பினேன் என்பவைகளாகிய முக்கியமான ஆவிக்குரிய உண்மைகளை, 'ஞானஸ்நானம்" என்று அடையாளச் செய்கையின் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

ஞானஸ்நானம் என்ற இந்த அடையாளச் செய்கை நாம் விசுவாசிக்கும் மேலான ஆவிக்குரிய உண்மைகளையும், ஆழமான கிறிஸ்தவ அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே நீங்கள் ஞானஸ்நானம் பெறாமல் இருக்கலாமா? சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஞானஸ்நானம் பெற்றவர்களாய் இருந்தால் மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஞானஸ்நானம் ஏன் எடுக்க வேண்டும்?

1. அடிப்படை : ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்பது புதிய ஏற்பாட்டில் நாம் படிக்கும் ஒரு முக்கியமான உபதேசமாகும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் ஆதிவிசுவாசிகளும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கித்தார்கள். அதைக்கேட்டு மனந்திரும்பி விசுவாசித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் அடிக்கடி வாசிக்கிறோம் (அப்போ. 2: 37-41; 8: 5-13; 8: 36-38; 9: 10-12; 9: 17-19; 10: 47-48; 16: 13-15; 27-34; 18: 5-8; 19: 1-5; 22: 14-17). நீங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பியிருப்பீர்கள் என்றால் அவசியம் ஞானஸ்நானம் பெறுதல் வேண்டும். நான் தான் விசுவாசிக்கிறேனே, பின்னர் நான் ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஞானஸ்நானம் என்பது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் போதனைகளில் அடிப்படையானது என்று நாம் அறிய வேண்டும்.

2. கீழ்ப்படிதல் : மனந்திரும்பவேண்டும் என்பது தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையாகும். அதைப்போல் ஞானஸ்நானம் எடுப்பது ஒரு கட்டளையாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதி திருச்சபையின் சரித்திரத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி வல்லமையாக பிரசங்கித்தார். அதைக் கேட்ட மக்கள், இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகிய பேதுருவையும், மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து 'சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி 'நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்று கூறினார் (அப்போஸ்தலர் 2:38). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் பரமேறிச் செல்லுதவதற்கு முன் தம்முடைய சீடர்களுக்குக் கூறிய முக்கிய வார்த்தைகளில் ஞானஸ்நானத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 'ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக் உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். பின்பு அவர்களை நோக்கி 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்"(மாற்கு 16: 15-16).

ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். மனந்திரும்பி, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிற ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். கீழ்ப்படிதலே புதிய ஆசீர்வாதங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்ற கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்களா?

3. உடன்படிக்கை : உடன்படிக்கை என்பது வேதாகமத்திலுள்ள ஒரு முக்கியமான வார்த்தையாகும். இருதரப்பினருக்கிடையே ஒரு பொது நோக்கத்திற்காக ஏற்படக் கூடிய உடன்பாடு அல்லது ஒப்பந்தத்தைப் பற்றி நாம் அறிவோம். இதைப் போல கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே தேவன் செய்திருக்கம் பல உடன்படிக்கைகளைப் பற்றி வேதாகமத்தில் படிக்கிறோம்.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது (1பேதுரு 3:21).

ஞானஸ்நானம் ஒரு உடன்படிக்கை என்று 1பேதுரு 3:21இல் வாசிக்கிறோம். ஞானஸ்நானம் என்பது மனிதன் தேவனோடு செய்யும் ஓர் உடன்படிக்கையாகும். ஒரு விசுவாசி நான் என்றென்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே பின்பற்றுவேன் என்பதற்கு அடையாளமாக எடுக்கும் ஞானஸ்நானம் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்து கொள்ளுவோம் வாருங்கள் என்ற ஒரு தெளிவான அழைப்பை எரேமியா 50:5 இல் வாசிக்கிறோம்.

ஞானஸ்நானம் எடுப்பது பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு விசுவாசியிடம், ஆண்டவர் ஞானஸ்நானம் நீ என்னுடன் செய்யும் ஒரு உடன்படிக்கை என்று பேசினார். நான் ஆண்டவராகிய இயேசுவோடு உடன்படிக்கை செய்கிறேன் என்ற உணர்வோடு அவர் ஞானஸ்நானம் எடுத்தார். இந்த கீழ்ப்படிதலின் செய்கை மறக்கமுடியாத ஓர் அனுபவமாகும் என்று அவர் சாட்சியிடுகிறார். நீங்கள் இயேசுவுடன் உடன்படிக்கை செய்ய அழைக்கப்படுகிறீர்கள். ஆண்டவரோடு நான் உடன்படிக்கை செய்கிறேன் என்ற உணர்வோடு ஞானஸ்நானம் பெறுவதற்கு நீங்கள் தீர்மானிப்பீர்களா?

4. அறிக்கை : வெளிப்படையாகக் காட்டும் சொல் அல்லது செயல்
'அறிக்கை" என்று சொல்லப்படுகிறது. அறிக்கை என்றால் சாட்சி அல்லது சான்று என்று பொருளாகும். ஞானஸ்நானம் ஓர் அறிக்கை ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுக்கும் போது 'நான் கிறிஸ்தவன், அதாவது கிறிஸ்துவுக்கு உரியவன், கிறிஸ்துவை உடையவன்" என்று தெரிவிக்கிறார்கள்.

கிறிஸ்துவற்ற பழைய வாழ்க்கையிலிருந்து ஒருவர் மனந்திரும்பும் போது, கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் ஓர் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவர் ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்துவோடுகூட மரித்தேன். கிறிஸ்துவோடு கூட எழும்பியிருக்கிறேன் என்ற ஆவிக்குரிய உண்மைகளை ஞானஸ்நானம் என்ற செயலின் மூலம் வெளிப்படுத்துகிறார். கலாத்திய நாட்டு விசுவாசிகளுக்குப் பவுல் எழுதும் போது ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்கள் எனறு எழுதினார். கலா. 3:27.

ஞானஸ்நானம் எப்போது எப்படி எடுக்கவேண்டும்?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு மனந்திரும்பிய பின்னரே ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்று ஏற்கனவே பார்த்தோம் (மாற்கு 16:16). கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தாலும், இரட்சிக்கப்பட்டு பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்ற பின்னரே ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக ஆதாரம் பரிசுத்த வேதாகமத்தில் இல்லை. பரிசுத்த வேதாகமம் போதிக்கும்படிதான் நாம் நடக்கவேண்டும். குழந்தைகளுக்கு விவரம் அறியக்கூடிய ஆற்றல் இல்லாததால் அவர்களால் விசுவாசிக்கமுடியாது. எனவே குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியாது. ஆனால் குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பொதுவாக கிறிஸ்தவ வளர்ப்பில் வளர்க்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக சிறு குழந்தைகளை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று சபையார் முன்னிலையில், குழந்தைக்குப் பெயர் கொடுத்து பிரதிஷ்டை செய்கிறார்கள். இதை ஞானஸ்நானம் என்று சொல்ல முடியாது. பிரதிஷ்டை என்றால் 'தேவன் ஆசீர்வதிப்பதற்காக பிரத்தியேகப்படுத்தல்" என்பது பொருள்.

சிலர் விவரம் தெரியும் வயது வந்தவுடன் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்கள். அதுவும் சரியல்ல. ஒருவர் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் விசுவாசித்த பிறகே ஞானஸ்நானம் பெறவேண்டும். ஞானஸ்நானத்தைப் பற்றிய வேதாகமப் போதனைகளைச் சரிவர கற்றுக் தேர்ந்து ஞானஸ்நானம் எடுப்பதே நல்லது.

எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த மந்திரிக்கு பிலிப்பு என்பவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்தார். அப்பொழுது அந்த மந்திரி இதோ தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை என்ன? இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்டு அந்த மாதிரி உடனே ஞானஸ்நானம் பெற்றான் (அப்.8:26-40).

ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் பொருளைக் குறித்து விளக்கும் போது தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதே பரிசுத்த வேதாகமப் போதனையின் சரியான முறை என்று படித்தோம். தண்ணீரில் மூழ்குவது கிறிஸ்துவோடு கூட அடக்கம் பண்ணப்பட்டதற்கும் எழும்புவது கிறிஸ்துவோடு கூட உயிரோடு எழும்பினதற்கும் அடையாளமாக இருக்கிறது என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.

சிலர் இயேசுவன் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அதுசரியாகாது. பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்ற திரியேகத்துவத்தைப் பற்றி வேதாகமம் போதிக்கிறது. நாம் திரியேக தேவனை விசுவாசிக்கிறவர்களானதால் மத்தேயு 28:19ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் பெறுதல் வேண்டும்.

யார் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்?

மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு விசுவாசிக்கும் தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டும். இரட்சிப்பின் அனுபவத்தைத் தொடர்ந்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒவ்வொரு விசுவாசியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மனந்திரும்புதல் என்ற அனுபவத்தோடுதான் கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பமாகிறது. கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருப்பதினாலோ, கிறிஸ்தவப் பெயரை வைத்திருப்பதினாலோ, ஒருவர் உண்மைக் கிறிஸ்தவராகிவிட முடியாது. ஒருவர் கிறிஸ்தவத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கலாம். கிறிஸ்தவக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கலாம். அது நல்லதுதான். ஆனால் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை மனந்திரும்புதல் என்ற அனுபவத்தில்தான் ஆரம்பமாகிறது.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே மனந்திரும்பவேண்டிய அவசியம் உண்டு. பாவத்தை விட்டு பரிசுத்த தேவனுக்கு நேராக நம் வாழ்க்கை திரும்புவதே மனந்திரும்புதல் எனப்படும். மனந்திரும்புங்கள் என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் 100 முறைகளுக்கு மேலாக வருகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்று பிரசங்கித்தார்.

மனந்திரும்புதல் என்ற வார்த்தை ஆழமான துக்கத்தையும், அன்பும், பரிசுத்தமும் நிறைந்த தெய்வத்திற்கு விரோதமாக பாவம் செய்து விட்டோமே என்ற ஒரு உண்மையான மனவருத்தத்தையும், உள்ளம் உடைதலையும் குறிக்கிறது. மனந்திரும்புதல் என்பது ஓர் உணர்ச்சிவசப்படும் அனுபவம் மட்டும் அல்ல. இது மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும் ஆகும். மனந்திரும்புகின்ற ஒருவன் பரிசுத்த வேதாகமத்தின் சத்தியங்களைச் சரியான முறையில் தெரிந்துகொள்வதற்கான ஒரு புதிய தெளிவைப் பெறுகிறார். இந்தப் புதிய தெளிவைப் பெறுகிறவர்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானிக்கிறார்கள். மனந்திரும்புகிறவர்களுக்கு பாவப் பழக்கங்களிலிருந்து ஆண்டவரின் வல்லமையால் விடுதலை கிடைக்கும்.

யாரிடத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்?

நான் யாரிடத்தில் எந்த சபையில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பலருடம் கேட்கிறார்கள். பல சபைப் பிரிவினரும் தங்கள் சபையில் உங்களைச் சேர்த்துக்கொள்வதற்காக உங்களை கட்டாயப்படுத்தலாம். குழப்பலாம். ஆனால் உங்களது ஆவிக்குரிய நலனில் கரிசனைகொண்டு கண்காணிக்கும் சபை ஊழியரிடம் ஞானஸ்நானம் பெறுவதே சாலச்சிறந்தது. வேதாகம அடிப்படையில் இயங்கும் ஆவிக்குரிய சபையில் ஞானஸ்நானம் பெற்று அச்சபை விசுவாசிகளோடு இணைந்து வளருவது மிகவும் நல்லது.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!


Speak Your Mind

Your email address will not be published. Required fields are marked *

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>